புதன், செப்டம்பர் 28, 2011

(5)ஹூது (அலை) அவர்கள்


وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ {6} سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَانِيَةَ أَيَّامٍ حُسُومًا فَتَرَى الْقَوْمَ فِيهَا صَرْعَى كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ {7}

ஆது சமுதாயத்தினரோ மிகக் கடுமையான கொடிய காற்றால் அழிக்கப்பட்டனர். அதை ஏழு இரவுகளும், எட்டு பகல்களும் தொடர்ந்து அவர்களுக்கு எதிராக இயக்கினான். அக் கூட்டத்தார் வேருடன் வீழ்ந்து கிடக்கும் பேரீச்சை மரங்களைப் போல் வீழ்ந்து கிடப்பதைக் காண்கிறீர். 69:6,7


( 2006 ல் ஏற்பட்ட சுனாமியின் போது எழுதியக் கட்டுரை)


ஹூது (அலை) அவர்கள்


நூஹ் (அலை) காலத்து மக்கள் முழுவதும் அழித்தொழிக்கப்பட்டு எஞ்சியிருந்தவர்கள் அனைவரும் இறைநம்பிக்கையாளர்களாக இருந்தார்கள். இம்மக்கள் அனைவரும் அல்லாஹ்வுடைய கோபத்தில் சீறிப்பாய்ந்த பேரலைகளுடன் கூடிய பெரு வெள்ளப் பிரளயத்தை நேரில் கண்டவர்கள் என்பதால் அல்லாஹ்வை மிகவும் அச்சத்துடன் வணங்கி வழிபடலானார்கள்.

ஆனாலும் இது அதிக காலங்கள் நீடிக்கவில்லை தலைமுறைகள் மாற,மாற கொஞ்சம், கொஞ்சமாக அம்மக்களின் மீது ஷைத்தான் தனது ஆதிக்கத்தை செலுத்தத் தொடங்கினான்.

ஏற்கனவே நூஹ் (அலை) அவர்கள் காலத்து மக்களுக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நீண்ட ஆயுள் வளத்தை கொடுத்தததைப் போல் ஆது, கூட்டத்தார்களுக்கு மாபெரும் உடல் வலிமையை கொடுத்திருந்தான்.

''உங்களை எச்சரிப்பதற்காக உங்களைச் சேர்ந்த மனிதருக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரை வருவது ஆச்சரியமாக உள்ளதா? நூஹுடைய சமுதாயத்திற்குப் பின் உங்களை வழித்தோன்றல்களாக46 அவன் ஆக்கியதையும், உடலமைப்பில் உங்களுக்கு வலிமையை அதிகப்படுத்தியதையும் எண்ணிப் பாருங்கள்! நீங்கள் வெற்றியடைவதற்காக அல்லாஹ்வின் அருட்கொடைகளை எண்ணிப் பாருங்கள்!'' (என்றும் அவர் கூறினார்).  7:69.

உலகமுடிவு நாள்வரை அல்லாஹ்விடம் அவகாசம் பெற்றுக்கொண்ட ஷைத்தான் இச்சமுதாயத்தை சும்மாவிடுவானா ? அவனுக்கே உரிய கைங்கரியங்ளுடன் சென்று அந்த மக்களையும் தன் வலையில் விழச்செய்தான் ஆனாலும் அல்லாஹ் அவர்களை கை விடாமல் அச்சமுதாயத்திலிருந்து ஹூது (அலை) அவர்களைத் தேர்வு செய்து இறைச் செய்திகளை அனுப்பி அம்மக்களை நேர்வழிப் படுத்த அனுப்பினான்.  

ஆது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஹூதை அனுப்பினோம். ''என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?'' என்று அவர் கேட்டார்.7:65

அதற்கு அல்லாஹ்வுக்கு நன்றி கூற கடமைப் பட்ட அச்சமுதாயம் மாறாக அவனது தூதரை மடமையில் இருப்பதாகவும் மேலும் அவரைப் பொய்யர் எனவும் கூறி புறக்கனிக்கத் தொடங்கினர்.

''என் சமுதாயமே! என்னிடம் எந்த மடமையும் இல்லை. மாறாக நான் அகிலத்தின் இறைவனுடைய தூதன்'' என்று அவர் கூறினார். 7:67

இறைத்தூதரைப் புறக்கனித்ததன் மூலமாக ஷைத்தானின் சதிவலையில் அமம்மக்கள் எளிதாக வீழ்ந்தனர் உலகின் சுகபோக வாழ்வில் மூழ்கித் திளைத்தனர் தங்கள் தலைவர்களின் கட்டளைகளை செவிமடுத்து நன்மை, தீமைகளை பிரித்தறியாமல் நியாயம் அநியாயம் பாராமல் செவ்வனே செய்து முடித்தனர் வேதத்தைப் பொய்ப்பித்தனர் படைப்பினங்களை வணங்கினர், படைத்தவனை மறுத்தனர்.  

இந்த ஆது சமுதாயத்தினர், தமது இறைவனின் சான்றுகளை நிராகரித்து, அவனது தூதர்களுக்கு மாறு செய்தனர். பிடிவாதக்கார ஒவ்வொரு கொடுங்கோலனின் கட்டளையையும் அவர்கள் பின்பற்றினார்கள். 11:59

எங்களை விட வலிமை மிக்கவர்கள் எவரேனும் பூமியில் உண்டா ? ஈராக்குடைய கெதியைப் பார்த்தீர்களா ? எங்களை எதிர்ப்பவர்களுக்கு இது தான் கெதி என மார்தட்டிய ஜார்ஜ் புஷ்கள் போன்று தங்களது வலிமையைக்கண்டு பெருமை பெருமை கொண்டார்கள் ஆது சமுதாயத்தவர்கள்.

ஆது சமுதாயம் பூமியில் நியாயமின்றி ஆணவம் கொண்டனர். ''எங்களை விட வலிமை மிக்கவர் யார்?'' எனக் கேட்டனர். அவர்களைப் படைத்த அல்லாஹ் அவர்களை விட வலிமையானவன் என்பதை அவர்கள் காணவில்லையா? அவர்கள் நமது சான்றுகளை மறுப்போராக இருந்தனர்.. 41:15.

தங்களுக்கு கீழுள்ளவர்கள் சிறிய தவறைச் செய்தாலும் பெரிய அளவிலான தண்டனையை கொடுத்து சித்ரவதை செய்து அதைக் கண்டு மகிழ்ந்தனர் ( ஏறத்தாழ இன்றைய அமெரிக்க டாம்பீக அரசை ஆது சமுதாயத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் கண்டிப்பாக மிகையாகாது)

நிரந்தரமாக இருப்பதற்காக வலிமையான கட்டடங்களை உருவாக்குகிறீர்களா? . 26:129.

அழகிய கலை நுணுக்கத்துடன்  கூடிய பங்களாக்களையும், மாட மாளிகைகளையும் கட்டி சொகுசு வாழ்க்கை வாழ்ந்தனர். பூமியில் மிகவும் உயரமான இடங்களில் மக்கள் கண்டு வியப்புறும் வகையில் வின்னை முட்டும் நினைவுச் சின்னங்களை அமைத்தனர் ஹூது நபியின் - ஆது சமுதாயம் என்பது கடந்த நூற்றாண்டுக்கு முன்போ ? அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்போ வாழ்ந்த சமுதாயம் அல்ல! மாறாக பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சமுதாயமாகும. அழகிய வேலைப்பாடுடன் பூமியில் கட்டிடங்கள், சிற்பங்கள், நினைவுச் சின்னங்கள் அதுவும் உயர்ந்த இடத்தில் அமைப்பது என்கிற கலை நமக்கு முன் சென்றப் பல சமுதாயத்தவர்களுக்கு முந்தையதாகும். இவைகளை எல்லாம் உருவாக்குவதற்கு உதவியளித்த இறைவளைப் பொய்ப்பித்தார்கள். அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய உடல் வலிமையை அறிந்து மெய் மறந்தார்கள்.

ஒவ்வொரு உயர்ந்த இடத்திலும் வீணாக சின்னங்களை எழுப்புகிறீர்களா? 26:128.

நிரந்தரமாக இருப்பதற்காக வலிமையான கட்டடங்களை உருவாக்குகிறீர்களா? 26:129.

தங்களின் உடல் பலத்தின் மீதும், அறிவாற்றல் மீதும் நம்பிக்கைக் கொண்டு இவைகள் இறைவன் நமக்களித்த அருட்கொடை என நினைக்க மறுத்து தொடர்நது ஹூது நபியின் கூற்றுக்களை மறுத்துப் பொய்ப்பித்து வந்ததால் இறுதியில் அல்லாஹ் அவர்கள் மீது கடும் கோபம் கொண்டு சாபமிடலானான்.

இவ்வுலகிலும், கியாமத் நாளிலும்1 அவர்களைச் சாபம் விரட்டியது. கவனத்தில் கொள்க! ஆது சமுதாயத்தினர் தமது இறைவனை மறுத்தனர். கவனத்தில் கொள்க! ஹூதுவின் சமுதாயமான ஆது சமுதாயம் (இறையருளை விட்டும்) தூரமாயினர்.. 11:60.

இவ்வாறு வஹீயை அனுப்பி தனது கோபத்தை வெளிப்படுத்தியப் பின்பும் அதை அவர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாததுடன் தங்களுக்கு வரவிருக்கும் பேரழிவை வரவழைத்துக் காட்டும்படி நபியவர்களிடம் திமிர் வாதம் பேசினர்.

நீர் உண்மையாளராக இருந்தால் எங்களுக்கு நீர் எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்'' என்று அவர்கள் கூறினர். 7:70.

ஒருநாள் மேகம் வானத்தின் வெளிச்சமண்டலத்தை மூடி பூமியில் எங்கும் இருள் படலமாக்கியது அதைப் பார்த்ததும் சாதாரணமாக மழை பொழியப் போகிறது என்றே அவர்கள் நினைத்தனர் அல்லாஹ்வின் வேதனை வரப்போகிறது என்று அவர்கள் நினைக்கவில்லை.

 (அவர்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி மேகமாக வருவதைக் கண்டதும், தமது பள்ளத்தாக்குகளை நோக்கி வரும் மேகமாகவே அதை அவர்கள் கருதினார்கள். ''இது நமக்கு மழை பொழியும் மேகமே'' எனவும் கூறினர். ''இல்லை! எதற்கு அவசரப்பட்டீர்களோ அதுவே இது. துன்புறுத்தும் வேதனை நிரம்பிய காற்றாகும்'' (என்று கூறப்பட்டது.) 46:24.

இறைவனுடைய கோபம் கொடுங்காற்றாக அம்மக்களை துடைத்தெறிந்தது அல்லாஹ்வுடைய எச்சரிக்கையின் மீது நம்பிக்கைக் கொள்ளாமல் அச்சமற்றவர்களாக ஷைத்தானின் சூட்சுமத்தின் கீழ் வீழ்ந்து தங்களை அழிவுக்கு ஆளாக்கிக்கொண்டனர்.

ஆது சமுதாயத்தினரும் பொய்யெனக் கருதினர். எனது வேதனையும், எனது எச்சரிக்கைகளும் எவ்வாறு இருந்தன?   தொடர்ந்து துர்பாக்கியமாக இருந்த ஒரு நாளில்381 அவர்களுக்கு எதிராகக் கடும் சப்தத்துடன் காற்றை நாம் அனுப்பினோம். வேருடன் பிடுங்கி எறியப்பட்ட பேரீச்சை மரங்களைப் போல் மனிதர்களை அது பிடுங்கி எறிந்தது. எனது வேதனையும், எச்சரிக்கைகளும் எவ்வாறு இருந்தன? 54:18 லிருந்து 21 வரை

ஆது சமுதாயத்தினரோ மிகக் கடுமையான கொடிய காற்றால் அழிக்கப்பட்டனர். அதை ஏழு இரவுகளும், எட்டு பகல்களும் தொடர்ந்து அவர்களுக்கு எதிராக இயக்கினான். அக் கூட்டத்தார் வேருடன் வீழ்ந்து கிடக்கும் பேரீச்சை மரங்களைப் போல் வீழ்ந்து கிடப்பதைக் காண்கிறீர். 69:6,7

படிப்பினைகள் : வின்னை முட்டும் கோபுரங்களும், மாட மாளிகைகளும், நினைவுச் சின்னங்களையும். பூமியில் நிர்மானித்தவர்கள் தனக்கு கீழுள்ளவர்களை சிறிய குற்றங்களுக்காக சித்ரவதை செய்து மகிழ்ந்த மாபெரும் உடல் வாலிமைப் பெற்றவர்கள், தங்களைப் போன்ற வலிமை வாய்ந்தவர்கள் பூமியல் உண்டோ ? என மார்தட்டியப் பேர்வழிகள் நிலையான துர்பாக்கியமுடைய ஒரு நாளில், பேரிறைச்சலைக் கொண்ட வேகமான காற்றில் ( புயலில்) சிக்கி சிதைந்து, மண்ணோடு மண்ணாக மறைந்து போனர். சுப்ஹானல்லாஹ்

நூஹ் (அலை) அவர்களுடன் கப்பலில் ஏறிக் கொண்டு பெரு வெள்ளத்திலிருந்து கரை ஒதுங்கி அல்லாஹ்வுக்கு நன்றி கூறியவர்களாக வெளியேறிச் சென்று புது இடத்தில் புதிய வாழ்க்கையைத் தொடங்கிய ஈமான் தாரிகளுடைய வாரிசுகள் இந்த பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்ட ஆது சமுதாயத்தவர்கள்.

ஆக ஆது சமுதாயத்தவர்கள் மீது வீசிய கோடுங்காற்றை அல்லாஹ் அந்த அநியாயக்கார மக்கள் மீது அவனே அனுப்பி அழித்ததாகக் கூறுகிறான் அது அவர்களை வேரோடு பிடுங்கப்பட்ட பேரீத்த மரங்களின் அடித்துறைப் போல் (அக்காற்று) மனிதர்களை பிடுங்கி எறிந்து விட்டது. எனவும், என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும் எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (என்பதைக் கவனிக்க வேண்டாமா?)54:21 எனவும், ஆகவ, நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும், நம்முடைய அருளைக்கொண்டு காப்பற்றினோம்; நம் வசனங்களைப் பொய்யெனக்கூறி, நம்பிக்கை கொள்ளாமல் இருந்தவர்களை நாம் வேரறுத்து விட்டோம். 7:72 என்று அல்லாஹ் கூறுவதால் அது இயற்கையின் சீற்றமல்ல ! மாறாக இறைவனின் கோபம் தான் என்று குர்ஆனிய சமுதாயமாகிய நாம் விளங்கிக் கொண்டு அல்லாஹ்வின் விருப்பத்திற்கொப்ப நமது வாழ்வை சீர் செய்து கொண்டு அல்லாஹ்விடமிருந்து நேர்வழியை பெற்றுக்கொள்ள முயற்சி செய்வோமாக !

இன்ஷா அல்லாஹ் தொடரும்....



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்