திங்கள், செப்டம்பர் 26, 2011

(9) மூஸா (அலை) அவர்கள்


وَأَنجَيْنَا مُوسَى وَمَن مَّعَهُ أَجْمَعِينَ  ثُمَّ أَغْرَقْنَا الْآخَرِينَ
மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம். பின்னர் மற்றவர்களை மூழ்கடித்தோம். 26:65,66

 ( 2006 ல் ஏற்பட்ட சுனாமியின் போது எழுதியக் கட்டுரை)


மூஸா (அலை) அவர்கள


இயற்கை எழில் கொஞ்சும் வளம்மிக்க பரந்து விரிந்த பெரியதொரு நிலப்பரப்பைக் கொண்ட மிஸ்ரு தேசத்தை ஃபிர்அவ்ன் ஆட்சி செய்தான். தனது திறமையினால் அரச பதவியை அடைந்ததாகக் கருதினான், தனது உடல் வலிமையைக் கண்டு பெருமைக் கொண்டிருந்தான் அதனால்  அல்லாஹ்வை மறுத்தான் தன்னைத் தானே கடவுள் என்று பிரகடனப் படுத்திக் கொண்டான் ஆனால் சூனியத்தின் மீது மாபெரும் நம்பிக்கை கொண்டிருந்தான்.

தனக்கு ஆபத்து என்றால் தனது மந்திரிசபை உறுப்பினர்களின் ஆலோசனைகளைக் கூட அடுத்ததாக ஆக்கிக்கொண்டு சூனியக் காரர்களிடம் முதல்கட்ட ஆலோசனையை நடத்தக் கூடியவனாகவும் அதன்படி செயலாற்றக் கூடியவனாகவும் இருந்தான்.

தனது சகாக்களைக் கொண்டு மிகப்பெரிய பிரமிட்களை உருவாக்கினான், தனது இறந்த உறவினர்களின் சடலங்களை பூமியில் புதைக்காமல் கெமிக்கல் மூலமாக பதப்படுத்தி பெட்டிகளில் வைத்து பாதுகாத்து வந்தான், மக்கள் ஒற்றுமையாக இருந்தால் ஒன்று கூடி அரசாங்கத்தை எதிர்க்கத் துனிந்து விடுவார்கள் எனக்கருதி மக்களை பலவாறாகப் பிரித்து பெரும் பிரவினர்களாக்கினான்.

ஃபிர்அவ்ன் பூமியில் ஆணவம் கொண்டிருந்தான். அதில் உள்ளவர்களைப் பல பிரிவுகளாக்கி அவர்களில் ஒரு பிரிவினரைப் பலவீனர்களாக ஆக்கினான் . . . 28:4

தனக்கு நிகராக ஒருவன் வந்து விடக்கூடாதென்றெண்ணி நகருக்குள் பிறக்கும் ஆண் குழந்தைகளை கொன்று விடும்படி உத்தரவுப் பிறப்பித்து அதைத் தீவிரமாக அமுல் படுத்தவும் செய்தான்.

. . . அவர்களில் ஆண் மக்களைக் கொன்றான். பெண்(மக்)களை உயிருடன் விட்டான். அவன் குழப்பம் செய்பவனாக இருந்தான். 2:49.

அவனுக்கும், அவனுடைய கொடுங்கோலாட்சிக்கும், முடிவுகட்ட அல்லாஹ் அழகான திட்டத்தை வடிவமைத்து செயல் படுத்தினான்.

அப்பூமியில் பலவீனர்களாகக் கருதப்பட்டோர் மீது அருள் புரியவும், அவர்களைத் தலைவர்களாக்கவும், அப்பூமிக்கு உரிமையாளர்களாக்கவும், அப்பூமியில் அவர்களுக்கு ஆதிக்கத்தை ஏற்படுத்தவும், ஃபிர்அவ்ன், ஹாமான் மற்றும் அவ்விருவரின் படையினரும் எதை அஞ்சினார்களோ அதை அவர்களுக்குக் காட்டவும் நாடினோம். 28:5 ,6

எகிப்து பிரதேசத்தில் ஒரு தாய்க்கு ஆண்குழந்தை பிறக்கிறது ஆனால் ஃபிர்அவ்னின் உத்தரவுப் பிரகாரம் அக்குழந்தை கொலை செய்யப்பட வேண்டும் ஆனாலும் அந்த தாய் அக்குழந்தைக்கு மறைத்து பாலூட்டுகிறார்கள் ஆனாலும் இது நீடிக்காது அவனுடைய ஆட்கள் கண்டுப் பிடித்து விட்டால் அதை ஃபிர்அவ்ன் கொலை செய்து விடுவான் அதனால் அவனுடைய அரண்மனையில் வளருவதே அக்குழந்தைக்கு மாபெரும் பாதுகாப்பாகும் என அல்லாஹ் முடிவு செய்கிறான் அக்குழந்தையின் தாயாரிடம் ''இவரை (இக்குழந்தையை) பெட்டிக்குள் வைத்து அதைக் கடரில் போடுவாயாக! கடல் அவரைக் கரையில் சேர்க்கும். எனக்கும், இவருக்கும் எதிரியானவன் இவரை எடுத்துக் கொள்வான்'' (என்று உமது தாயாருக்கு அறிவித்தோம்). எனது கண்காணிப்பில் நீர் வளர்க்கப்படுவதற்காக உம் மீது என் அன்பையும் செலுத்தினேன். 20:39.

ஆனாலும் சுமந்து கஸ்டப்பட்டு பெற்ற தாய் என்பதால் தனது குழந்தையை நதியில் தூக்கி எறிய தயக்கம் ஏற்படலாம் என்பதால் அல்லாஹ் அவரிடம் வாக்குறுதி ஒன்றையும் அளிக்கிறான்.

''இவருக்குப் பாலூட்டு! இவரைப் பற்றி நீ பயந்தால் இவரைக் கடரில் போடு! பயப்படாதே! கவலையும் படாதே! அவரை உன்னிடம் நாம் திரும்ப ஒப்படைத்து, அவரைத் தூதராக ஆக்குவோம்'' என்று மூஸாவின் தாயாருக்கு அறிவித்தோம். 28:7

அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க பேழை ஒன்றில் குழந்தையை வைத்து தனது மூத்த மகளையும் அப்பேழை செல்லும் வழிகளில் நதியை பின் தொடரும்படி கூறுகிறார்கள் அச்சகோதரியும் உடன் செல்கிறார் அவருக்கு முன்னதாகவே அல்லாஹ்வும் அக்குழந்தைக்கு பாதுகாப்பாக செல்கிறான்.

''நீ அவரைப் பின்தொடர்ந்து செல்!'' என்று மூஸாவின் சகோதரியிடம் (அவரது தாயார்) கூறினார். அவர்கள் அறியாத வகையில் தொலைவிரிருந்து அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். 28:11

அவனும் அல்லாஹ்வை மிஞ்சுவதற்கு சூழ்ச்சி செய்தான் அல்லாஹ்வும் அவனுடைய தனிப் பெரும் வல்லமையால் தன்னுடைய மாட்சிமையை உலகம் அழியும்வரை மக்களுக்கு அத்தாட்சியாக்குவதற்கு மாபெரும் சூழ்ச்சி செய்தான் பேழையில் மிதந்து வந்த அந்த அழகான ஆண் குழந்தை ஃபிர் அவனின் மனைவி ஆசியா அவர்களின் பார்வையில் படுகிறது.

''எனக்கும், உமக்கும் இவர் கண் குளிர்ச்சியாக இருக்கட்டும்! இவரைக் கொல்லாதீர்கள்! இவர் நமக்குப் பயன்படலாம். அல்லது இவரை மகனாக்கிக் கொள்ளலாம்'' என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறினார். அவர்கள் (விளைவை) அறியாதிருந்தனர். 28:9

தன் மனைவி அக்குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளலாம் என்றுக் கூறியப் பின் அவனால் தடுக்க முடியவில்லை சம்மதித்து விடுகிறான் அக்குழந்தை அரண்மனைக்கு கொண்டு செல்லப் படுகிறது குழந்தைக்கு பால் கொடுக்க செவிலித் தாய்மார்கள் என ஒருப்பட்டாளமே வரவழைக்கப் படுகின்றனர். ஆனாலும் அக்குழந்தையை எவரது மடியிலும் பால் அருந்த விடாமல் அல்லாஹ் தடுத்து விடுகிறான்.  பாலூட்டும் பெண்களை முன்பே அவருக்கு (மூஸாவுக்கு) விலக்கியிருந்தோம். .'' 28:12

பேழையில் மிதந்து சென்று கொண்டிருந்த தனது பச்சிளம் சகோதரரை கண்கானித்து கூடவே பின் தொடர்ந்த சகோதரி ஃபிர்அவன் மனைவி ஆசியா அவர்களிடம் இக்குழந்தைக்கு சிறப்பாக பாலூட்டி வளர்க்கும் ஒருவரை கொண்டு வரட்டுமா எனக் கேட்கிறார் ? அதற்கு ஆசியா அவர்கள் சம்மதிக்கிறார்கள், உடன் விரைந்து சென்று தனது தாயாரிடம் விபரம் கூறி அழைத்து வந்து விடுகிறார்.

அக்குழந்தை தனது தாயாரிடம் பால் அருந்தி ஃபிர்அவ்னின் மாளிகையில் வளரத் தொடங்குகிறது (பேழை கண்டெடுக்கப்பட்ட பின்) உம் சகோதரி நடந்து வந்து,…''உங்களுக்காக இக்குழந்தையைப் பொறுப்பேற்று வளர்க்கும் ஒரு குடும்பத்தினரைப் பற்றி நான் உங்களுக்குக் கூறட்டுமா? அவர்கள் இவரது நலனை நாடுபவர்கள்'' என்று அவள் கூறினாள்.  20:12

அல்லாஹ் அத்தாய்க்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுகிறான் நதியில் மிதக்க விடப்பட்ட தனது குழந்தை தனக்கே வந்து விடுகிறது , ஃபிர்அவ்னுக்காக தீட்டப்பட்ட அல்லாஹ்வின் (பிளான்) திட்டமும் செம்மையாக செயல் படத் தொடங்குகிறது அக்குழந்தை ஃபிர்அவ்னின் மாளிகையில் வளர்ந்து வாலிபமடைகிது அவர்களே மூஸா ( அலைஹிஸ்ஸலாம் ) எனும் இறைத் தூதராவார்கள் அவர் பருவமடைந்து சீரான நிலையை அடைந்த போது அவருக்கு அதிகாரத்தையும் கல்வியையும் அளித்தோம்.164 நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூரி வழங்குவோம். 28:14.

ஃபிர்அவ்ன் தன்னை எதிர்ப்பவர்களை கூட்டம் கூட்டமாக கொலை செய்வதும், சிறையிலடைப்பதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தான் அவ்வாறு ஏராளமான மக்கள் அவனது சிறைக் கொட்டடியில் சிதரவதை செய்யப்பட்டுக் கொண்டிருந்தனர் மூஸா (அலை) அவர்கள் இறைச்செய்திகளைப் பெற்றுக்கொண்டு ஃபிர்அவனிடம் செல்கிறார்கள்.

 ''ஃபிர்அவ்னே! நான் அகிலங்களின் இறைவனால் அனுப்பப்பட்ட தூதன் ஆவேன்''. . . ''அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதுவும்) கூறாமலிருப்பது என்மீது கடமையாகும்; உங்களுடைய இறைவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்திருக்கிறேன் - ஆகவே இஸ்ரவேலர்களை என்னுடன் அனுப்பிவை'' (என்றும் அவர் கூறினார்).

அவன் எளிதில் இதை ஏற்றுக் கொள்வானா ? கண்டிப்பாக அவன் ஏற்றுக் கொள்ள மாட்டான் ! அவன் வெகுண்டெழுகிறான், அவர் மீது சினம் கொண்டு சீறிப் பாய்கிறான். தான் தத்து எடுத்து தனது கண் முன்னாள் வளர்ந்த ஒருவர் தனது படாடோப வாழ்வை வீழ்த்தி தன்னை இறைவனுக்கு சிறம் பணிக்கக் கூறுகிறாரே என்றுக் குமுறுகிறான் வார்த்தைகளால் குதறித் தள்ளுகிறான். அத்துடன் உன்னிடம் இருக்கும் அத்தாட்சியை காட்டு என்கிறான்.

''நீர் உண்மை கூறுபவராக இருந்து, சான்றைக் கொண்டு வந்திருந்தால் அதைக் கொண்டு வா!'' என்று அவன் கூறினான். அப்போது அவர் தமது கைத்தடியைப் போட்டார். உடனே அது உண்மையாகவே பாம்பாக ஆனது. அவர் தமது கையை வெளியே காட்டினார். உடனே அது பார்ப்போருக்கு வெண்மையாகத் தெரிந்தது.. ''இவர் தேர்ந்த சூனியக்காரராக உள்ளார். உங்கள் பூமியிரிருந்து உங்களை வெளியேற்ற இவர் எண்ணுகிறார். என்ன கட்டளையிடப் போகிறீர்கள்?'' என்று ஃபிர்அவ்னின் சமுதாயப் பிரமுகர்கள் கூறினர். 7:106, 110.

அங்கு அல்லாஹ் அவருக்கு அற்புதம் நிகழ்த்தும் ஆற்றலை வழங்கி இருக்க வில்லை என்றால் ? வாய் வார்த்தைகளை மட்டும் கூறி இருப்பார்களேயானால் அவ்விடத்திலேயே அவருக்கு முடிவுக் கட்டி இருப்பான். அவன் மாபெரும் வம்பன் என்பது அல்லாஹ்வுக்குத் தெரியும் என்பதால் சாதாரணக் கம்பில் கணவில் கூட காண முடியாத அளவுக்கு மாபெரும் அற்புதங்களை உண்மையில் நிகழ்த்திக் காட்டச்செய்தான். ஆனாலும் அவன் அதை ஏற்க மறுத்தான். அத்துடன் தனது மக்களையும், தனது சகாக்களையும் நோக்கி

''பிரமுகர்களே! என்னைத் தவிர உங்களுக்கு வேறு கடவுளை நான் அறியவில்லை'' என்று ஃபிர்அவ்ன் கூறினான். ''ஹாமானே! எனக்காக களிமண்ணைச் சுட்டு எனக்கொரு மாளிகையைக் கட்டு! (அதன் மீது ஏறி) மூஸாவின் இறைவனைப் பார்க்க வேண்டும். அவர் பொய்யர் என்றே நான் நினைக்கிறேன்'' என்றான். 28:38

மூஸா (அலை) அவர்களை பொய்யராக்க முடிவு பண்ணினான். ஏற்கனவே சூனியக்காரர்கள் நிறைந்து வாழும் பிரதேசமாக எபிப்து திகழ்ந்ததால் மூஸா (அலை) அவர்கள் ஆற்றும் அற்புதத்தை சூனியம் என்கிற தெளிவான முடிவுக்கே வந்தான். எகிப்து பிரதேசத்தில் அனைத்து சூனியக்காரர்களும் ஃபிர்அவ்னின் மாளிகைக்கு வரவழைக்க உத்தரவிட்டான் ''திறமையான ஒவ்வொரு சூனியக்காரனையும் என்னிடம் கொண்டு வாருங்கள்!'' என்று ஃபிர்அவ்ன் கூறினான்.. 10:79.

சூனியக்காரர்களின் பட்டாளம் புடைசூழ ஃபிர்அவனின் மாளிகையை நோக்கி விரைந்து வருகிறார்கள். மூஸா (அலை) அவர்கள் கைத்தடி மூலம் சாகஸம் புரிகிறார்கள் என்பதால் ஒவ்வொரு சூனியக் காரர்களும் ஒரு கைத்தடியில் வித்தைகளுடன் வருகின்றனர்.

''மூஸாவே! (வித்தைகளை) நீர் போடுகிறீரா? நாங்களே போடட்டுமா?'' என்று கேட்டனர்.. ''நீங்களே போடுங்கள்!'' என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர்.  ''உமது கைத்தடியைப் போடுவீராக!'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது. 7:115 …7:117

இந்நிகழ்வு சூனியக்காரர்கள் அனைவர்களையும் திகிலுறச் செய்தது, அவர்கள் செய்வதறியாது திகைத்தனர். பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல் கண் கட்டி வித்தையைச் செய்பவர்களுக்கு தான் செய்தது தற்காலிக வித்தைதான் என்று நன்றாகத் தெரியும் அதனால் எதிரில் தோன்றி தங்களது வித்தைகளை விழுங்கி ஏப்பம் விட்டதை உண்மை என ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை அதுவும் தன்னை இறைத் தூதர் என்று பிரகடணப் படுத்தியவருடைய கைகளிலிருந்து வெளியானதால் நம்பாமல் இருக்க முடியவில்லை அல்லாஹ்வுடைய மாபெரும் ஆற்றலை அவனது தூதர் மூலம் நிகழ்ந்ததைக் கண்டவர்கள் அவ்விடத்திலேயே ஏகஇறைவனை ஏற்று முஸ்லிமாகி விடுகின்றனர். 
 
சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தனர். ''அகிலத்தாரின் இறைவனாகிய மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம்'' என்றும் கூறினர். 120.121,122.

மேற்காணும் சம்பவங்கள் முழுவதும் ஃபிர்அவ்ன் முன்னிலையில் நடைபெறுகிறது. விடுவானா ? என்னைக் கேட்காமல் எப்படி நீங்கள் ஈமான் கொள்வது என ஈமான் கொண்டவர்கள் மீது ஃபிர்அவ்ன் சீறிப்பாய்ந்தான் கர்ஜித்தான். ''நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? இது, இந்த நகரத்திரிருந்து அதன் உரிமையாளர்களை வெளியேற்றுவதற்காக இங்கே நீங்கள் நிகழ்த்திய சதி. (இதன் விளைவை) அறிந்து கொள்வீர்கள்!'' என்று ஃபிர்அவ்ன் கூறினான். 7:123

அவனது கண்முன்னே அவர்களுக்கு தெரிந்தவரை கண்கட்டி வித்தையைச் செய்கின்றனர் அதைக் கண்டு குதூகலமடைகிறான் அதற்கு மாற்றமான ஒரு நிலை அங்கு ஏற்பட்டதும் அவர்கள் தோல்வியைத தழுவி சத்தியத்தை ஏற்றுக் கொண்டதும் தனது நிலையை மாற்றிக்கொண்டு நீங்களும் அவருடைய ஆட்கள் தான் என்று பல்டி அடிக்கிறான.

அத்துடன் அவர்களையும் மூஸா(அலை) அவர்களையும் கொன்று விட திட்டம் தீட்டுகிறான்ஆனாலும் அல்லாஹ்வால் அவனுக்கு விதிக்கப்பட்ட கெடு நெருங்குவதை அவனால் அறிய முடியவில்லை. அவனுடைய கொலை திட்டத்தை அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மூஸா(அலை) அவர்களையும், அவர்களுடன் ஈமான் னொண்டவர்களையும் வேறு ஒரு இடத்திற்கு இடம் பெயறச்சொல்கிறான் மேலும், ''என் அடியார்களை இரவில் அழைத்துச் செல்வீராக! நீங்கள் (எதிரிகளால்) பின் தொடரப்படுவீர்கள்'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். 26:52

அல்லாஹ்வின் கட்டளைப் பிரகாரம் அந்த இரவிலேயே மூஸா(அலை) அவர்களும் அவர்களுடன் ஈமான் கொண்டவர்களும் அல்லாஹ்வுடைய வஹி வந்ததும் இடம் பெயர்ந்து செல்லலானார்கள் ஆனாலும் அதற்கு முன்பே ஃபிர்அவ்னுடைய கொலைவெறி திட்டம் தயாராக இருந்ததால் அவனுடைய பெரும்படை வைகறையில அவர்களை துரத்தலாயிற்று. காலையில் அவர்களைப் பின் தொடர்ந்தனர். 26:60.

மூஸா (அலை) அவர்களுடைய கூட்டாத்தார்களை ஃபிர்அவ்னுடையப் படைகள் விரட்டிச் செல்கிறது அவர்களை கடல் குறுக்கிடுகிறது மூஸா(அலை) அவர்களின் கூட்டத்தார்கள் சிறிய அளவிலான எண்ணணிக்கையுடையவர்கள் என்பதால் ஃபிர்அவ்னுடைய பெரும் படையைக்கண்டு அச்சமடையலானார்கள். இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்டபோது. இரு கூட்டத்தினரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்ட போது ''நாம் பிடிக்கப்பட்டு விடுவோம்'' என்று மூஸாவின் சகாக்கள் கூறினர். 26:61

மூஸா(அலை)அவர்கள் தங்களுடைய சீடர்களுக்கு தைரியம் அளிக்கிறார்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறார்கள். ''அவ்வாறு இல்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான்'' என்று அவர் கூறினார். 26:62

அல்லாஹ்வுடைய உதவி அவர்களை அடைகிறது அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மூஸா (அலை) அவர்களை நோக்கி கூறுகிறான் . ''உமது கைத்தடியால் கடரில் அடிப்பீராக'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது. 26:63

கடல் பிளந்து மிகப் பெரும் பாதை  பல வழிகளாக உதயமாயிற்று ஒவ்வொரு  வழியிலும் ஒவ்வொரு கூட்டமாக கடந்தேறுகிறார்கள், விரட்டிக் கொண்டு வந்த எதிரிப்படை தொடர்ந்து அவர்களை விரட்டியவாறு பிளவுண்ட அவ்வழிகளுக்குள் கடந்தேறுகிறார்கள். அங்கே மற்றவர்களையும் நெருங்கச் செய்தோம். 26:64.

இவ்வாறு இரு படைகளும் கடல் பிளவுண்ட இடத்திற்குள் சங்கமித்தார்கள் இதில் முன்பே நுழைந்து விட்ட மூஸா (அலை) அவர்களும் அவர்களின் சீடர்களும் கடலுக்கப்பால் சென்று விட்டனர். மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம். 26:65

அவர்கள் குறிப்பிட்ட அந்த எல்லையைக் கடந்ததும் கடல் மீண்டும் பழைய நிலையை அடைந்து வழிகளை மூடி விட்டது  பின்னர் மற்றவர்களை மூழ்கடித்தோம்.26:66

இவ்வாறு ஃபிர்அவ்னின் படைகள் முழுவதும் மூழ்கிக் கொண்டிருக்கும் போது அந்த கசப்பான வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது இனி வேறு வழியில்லை என முடிவுக்கு வந்த ஃபிர்அவ்ன் இறைவனைக் கெஞ்சினான் ஈமான் கொள்கிறேன், எனக் கூறினான்.

இஸ்ராயீரின் மக்களைக் கடல் கடக்கச் செய்தோம். ஃபிர்அவ்னும், அவனது படையினரும் அக்கிரமமாகவும், அநியாயமாகவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். முடிவில் அவன் மூழ்கும் போது ''இஸ்ராயீரின் மக்கள் நம்பியவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நம்புகிறேன்; நான் முஸ்ரிம்'' என்று கூறினான். 10:90

இப்படித் தான் சாக வேண்டும் என்று வரம்பு மீறிய வம்பர்களுக்கு அல்லாஹ் விதித்து விட்டால் அது அவ்வாறே நடக்கும் அல்லாஹ்வுடைய கடும் கோபத்தால் அவனுக்கு எற்பட்ட இந்த கெதியை பின் வரக்கூடிய மக்கள் தெரிந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதால் அவனுடைய பூதஉடலை மட்டும் அப்படியே விட்டு வைப்பதாக கூறுகிறான் இப்போது தானா? (நம்புவாய்!) இதற்கு முன் பாவம் செய்தாய்; குழப்பம் செய்பவனாக இருந்தாய். உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம்.217 (என்று கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர். 10:91, 92.
 
அல்லாஹ் கூறிய படி இன்று அவனுடைய பூத உடல் கடலில் பணிப் பாறையில் கண்டெடுக்கப்பட்டு; ஆராய்ச்சிக்குட் படுத்தி ஆய்வாளர்களால் ஃபிர்அவ்னின் உடல் தான் என உறுதி செய்யப்பட்டு இன்று எகிப்து நகரில் பிரபல மியூசியம் ஒன்றில் மக்கள் பார்த்து படிப்பினை பெரும் பொருட்டு அல்லாஹ்வின் மாபெரும் அத்தாட்சி காட்சி பொருளாக்கப் பட்டுள்ளது. இதில் சான்று உள்ளது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. 26:67

படிப்பினைகள்: அல்லாஹ்வுடைய கட்டளைக்கு கடல் பிளந்து வழி விட்டதும், மீண்டும் வழியை மூடிக்கொண்டதும் அல்லாஹ்வுடைய கட்டளைக்கு கடல் கட்டுப்பட்டதன் மூலம் உலகம் முடியும் காலம் வரை கடல் அல்லாஹ்வுடைய கட்டுப்பாட்டை மீறாது கடலுக்கடியில் பூகம்பம் ஏற்பட்டாலும் சரி, கடல் கொந்தளித்து நீரை வெளிப்படுத்தி மக்களை அழித்தாலும் சரி, கடல் அலைகளை சுனாமியாக வெளிப்படுத்தி மக்களை விழுங்கினாலும் சரி அவைகள் இறைவனுடைய உத்தரவின் வெளிப்பாடுகள் தான் என்பதை மூஸா(அலை)அவர்களையும் அவர்களை ஈமான் கொண்டவர்களையும் வெளியேற்றி விட்டு நிராகரிப்பாளர்களை விழுங்கியதிலிருந்து படிப்பினைப் பெறலாம் . (நபியே!) உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.. 26:68

இன்ஷா அல்லாஹ் தொடரும்....

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்