செவ்வாய், செப்டம்பர் 27, 2011

(7) லூத் நபி(அலை) அவர்கள்.


فَجَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهِمْ حِجَارَةً مِّن سِجِّيلٍ

அவர்கள் மீது சூடேற்றப்பட்ட கல் மழை பொழிந்து, அவ்வூரின் மேற்பகுதியைக் கீழ்ப்பகுதியாக்கினோம். 15:74

( 2006 ல் ஏற்பட்ட சுனாமியின் போது எழுதியக் கட்டுரை)


லூத் நபி காலத்து கல்மாறிக்காற்று



லூத் நபி காலத்தில் அவர்களின் சமூகத்தார்களின் மீது அல்லாஹ் எவ்வாறு கோபம் கொண்டு அவ்வூரை தலை கீழாக புரட்டினான் என்பதை சுருக்கமாகப் பார்ப்போம் லூத் (அலை) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதராக தேர்வு செய்யப்பட்டார்கள்.

அவர்களுடைய சமுதாயத்து மக்களிடம் தான் நபியாக தேர்வு செய்யப்பட்ட செய்தியை கூறினார்கள்.

 ''நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய தூதர். எனவே அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்! 26:162, 163

அந்த மக்களும் இதற்கு முந்தைய மக்கள் போன்றே அல்லாஹ்வுடைய வேதத்தை பொய்ப்பித்தனர், அவனுடைய தூதரை நபியாக ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.

லூத்துடைய சமுதாயம் எச்சரிக்கைகளைப் பொய்யெனக் கருதினர்.54: 33

அத்துடன் அவர்களுக்கு முந்தைய எந்த சமுதாயத்தவர்களும் செய்திடாத செய்யத் துனியாத, மனித சமுதாயம் வெட்கி தலை குணியக் கூடிய கீழானச் செயலைச் செய்தனர்.

லூத்தையும் (தூதராக அனுப்பினோம்). ''உலகில் உங்களுக்கு முன் யாரும் செய்திராத வெட்கக்கேடான காரியத்தையா செய்கிறீர்கள்?'' என்று தமது சமுதாயத்திடம் கேட்டார். ''நீங்கள் பெண்களை விட்டு இச்சைக்காக ஆண்களிடம் செல்கிறீர்கள்! நீங்கள் வரம்பு மீறிய கூட்டமாகவே இருக்கிறீர்கள்'' (என்றும் கூறினார்.) 7:80 லிருந்து 81 வரை

அச்சமுதாயத்தை நோக்கி நபியவர்கள் எவ்வளவோ எச்சரிக்கை செய்தும் அவர்கள் திருந்தவில்லை, தங்களது இழிசெயலுக்காக வருந்தவுமில்லை தொடர்நது அவைகளை நாகரீகமெனக் கருதி செய்து கொண்டிருந்தார்கள் இறைத்தூதர் அவர்கள் அருவெருக்கத்தக்க அச்செயலைக் கண்டு மிகவும் சஞ்சலப்பட்டார்கள்.

நமது தூதர்கள்161 லூத்திடம் வந்த போது, அவர்கள் விஷயத்தில் அவர் கவலைப்பட்டார். அவர்களுக்காக மனம் வருந்தினார். ''இது மிகவும் கடினமான நாள்'' எனவும் கூறினார். 11:77

இப்படியாக காலங்கள் ஓடிக்கொண்டிருந்தன அவர்களுக்கும் அல்லாஹ்விடமிருந்து எச்சரிக்கைகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன, ஆனாலும் அந்த அநாகரீகச் செயலை செய்யும் அநியாயக் காரர்களுக்கு அச்செயலை ஷைத்தான் அழகாக்கி காட்டியும், அச்செயல் ஒரு நாகரீகம் வாய்ந்தவை போல் ஆக்கியும் காட்டினான். அச்செயலை செய்பவர்கள் தங்களை நாகரீகத்தின் உச்சானிக் கொம்பில் வீற்றிருந்ததாக பறைசாட்டிக் கொண்டனர்.

இன்றைய மேற்கத்திய நாகரீகர்கள் ? போன்று என்றால் மிகையாகாது. திருக்குர்ஆன் முழுவதும் அல்லாஹ்வுடைய கோபத்திற்கு ஆளாகி பேரழிவைத் அடைந்து கொண்ட முன்னாள் சமுதாயத்தவர்களுடைய வரலாற்றையும், இன்னாள் மேற்கத்தியர்களுடைய வாழ்க்கையையும் ஒப்பிட்டுப்பார்த்தால் அநேகமாக என்பதை விட முழுமையாக ஒத்துப்போவதை தெளிவாக காணமுடியும்.

அது மட்டுமல்ல மேற்கானும் ஓரினச் சேர்க்கை சம்பவம் இலைமறைக் காயாக நடந்து வந்ததை இன்றைய மேற்கத்திய அரசாங்கம் அதற்கு அங்கீகாரம் வழங்கி கௌரவிக்கவும் செய்திருக்கிறது என்பதை நாம் மிகைப்படுத்திக் கூறவில்லை அவர்களுடைய ஊடகங்கள் வாயிலாகவே அறியவும் செய்தோம். (அது திருமன பந்தமாம் ?).

லூத் நபி சமுதாயத்து வரம்பு மீறிய மக்களை அழித்தொழிக்க அல்லாஹ் முடிவு செய்துவிட்டான் எந்த ஒரு சமுதாயத்திடமும் தன்னுடையை வேதனையை இறக்குவதற்கு முன் ஒரு சோதனையை அனுப்புவான் அந்த சோதனையில் அவர்கள் அளவு கடந்து வரம்பு மீறும்போது அந்த வரம்பு மீறலையே அவர்களுக்கு முடிவாக அமைத்து விடுவான்.

ஒரு நாள் சோகமே உருவாக லூத் (அலை) அவர்கள் தங்களுடைய இல்லத்தில் அமர்ந்திருக்கும் போது வானவர்கள் இளமைத் தோற்றத்தில் அவர்களுடைய இல்லத்திற்கு வருகை தருகிறார்கள் அவர்களிடத்தில் இவர்கள் வரம்பு மீற முயற்சிப்பார்கள் என்று அல்லாஹ் அறிந்திருந்ததால் அவ்வாறு வானவர்களை இளைஞர் தோற்றத்தில் அனுப்பி வைத்தான்.

அத்தூதர்கள் லூத்துடைய குடும்பத்தாரிடம் வந்த போது ''நீங்கள் அறிமுகமற்ற சமுதாயமாக இருக்கிறீர்களே'' என்று அவர் கூறினார்.  (அதற்கவர்கள்) ''அவ்வாறில்லை! அவர்கள் சந்தேகம் எழுப்பியதை உம்மிடம் கொண்டு வந்துள்ளோம்; உண்மையையே உம்மிடம் கொண்டு வந்தோம்; நாங்கள் உண்மை கூறுபவர்கள்;  15:61,62

இறைத் தூதர் அவர்களுடைய வீட்டில் ஊருக்குப் பரிச்சயமில்லாத அழகிய இளைஞர்கள் வந்திருக்கிற செய்தி நகருக்குள் பரவவே இறைத்தூதருடைய வீட்டை சேடிஸ்டுகள் சூழ்ந்து கொள்கிறார்கள்.

(லூத்தின் விருந்தினர்களாக வாலிபர்கள் வந்திருப்பதையறிந்து) அவ்வூர் வாசிகள் மகிழ்ச்சியுடன் வந்தனர்.. 15:67

அவர்களைக் கண்ட இறைத்தூதர் லூத்(அலை) அவர்கள் செய்வதறியாது திகைத்துப் போய் அவர்களை எச்சரித்து  அங்கிருந்து வெளியேற்ற முயற்சி செய்கிறார்கள்.

''இவர்கள் எனது விருந்தினர்கள். எனவே எனக்கு அவமானத்தை ஏற்படுத்தாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! என்னை இழிவு படுத்தாதீர்கள்!'' என்று (லூத்) கூறினார்.26 15:68,69

இறைத் தூதருடைய எச்சரிக்கையை பொருட்படுத்தாத அந்த சேடிஸ்டுகள் நாங்கள்  விரும்பாத விஷயங்கள் பற்றி எங்களிடம் பேச வேண்டாம் ஏற்கனவே உங்களிடம் கூற வில்லையா ? என்று  கூறுகிறார்கள்.

''உலகத்தாரை விட்டும் உம்மை நாங்கள் தடுக்கவில்லையா?'' என்று அவர்கள் கேட்டனர். 15:70

இறைவனை மறுத்தவர்கள் மந்தைகள் போன்றவர்கள் மறுமையை மறுத்தவர்கள் மகா மோசமானவர்கள் நினைத்தததை சாதிக்கத் துடிப்பவர்கள் மனசாட்சி அறவே இல்லாத மிருகக் கூட்டங்கள் என்பதால் வந்திருக்கும் இளைஞர்களை துவம்சம் செய்துவிடுவார்கள் என்று அஞ்சிய நபியவர்கள் என் மகள்களையாவது திருமனம் செய்து கொள்ளுங்கள் இவர்களை விட்டு விடுங்கள் எனக் இறுதியில் கெஞ்சத் தொடங்குகிறார்கள்.

நபியின் அழுகுரல் அந்த காண்டா மிருகங்களின் காதுகளில் விழவில்லை கண்கள் துவேசப் பார்வையை அவர்களின் மீது வீசியது அவர்களை துவம்சம் செய்வதற்காக நெருங்குகிறார்கள்.

''நீங்கள் (ஏதும்) செய்வதாக இருந்தால் இதோ எனது புதல்விகள் உள்ளனர்'' என்று அவர் கூறினார். 15:71

ஆனாலும் அவர்கள் நபியுடைய மகள்கள் தேவையில்லை அவர்களுடைய வீட்டிற்கு வருகைதந்திருந்த இளைஞர்களை தங்களது துர்ச்செயலுக்குட்படுத்துவதில் தீவிரமடைகிறார்கள் அல்லாஹ் அவர்களுடைய பார்வையைப் பறித்து விடுகிறான்.

அவருடைய விருந்தினரைத் தீய காரியத்திற்கு அவர்கள் இழுத்தனர். உடனே அவர்களின் கண்களைக் குருடாக்கினோம். எனது வேதனையையும் எச்சரிக்கைகளையும் சுவையுங்கள்! (என்றோம்) 54:37.

அந்த சமுதாயத்தை அல்லாஹ்வின் தண்டனை மூலம் துடைத்தெறியப்படவிருப்பதையும் அந்த வானவர்கள் மூலமே இறைவன் நபிக்கு அறிவித்து அங்கிருந்து நபியையும் அவரது குடும்பத்தாரையும் இரவோடிரவாக திரும்பிப் பார்க்காமல் இடம் பெயரச் சொல்லி உத்தரவிடுகிறான்.  

 'இரவின் ஒரு பகுதியில் உமது குடும்பத்தாருடன் செல்வீராக! அவர்களைப் பின் தொடர்ந்து (கடைசியில்) நீர் செல்வீராக! உங்களில் எவரும் திரும்பிப்பார்க்க வேண்டாம். கட்டளையிட்டவாறு செய்து முடியுங்கள்!'' என்று கூறினார்கள். ''அவர்கள் அனைவரும் காலைப் பொழுதில் வேரறுக்கப்பட்டு விடுவார்கள்'' என்ற தீர்ப்பையும் அவருக்கு அறிவித்தோம். 15:65,66

ஆகவே இறைத்தூதரும் அவர்களுடன் ஈமான் கொண்ட முஸ்லீம் குடும்பத்தினரும் இடம் பெயரத் தொடங்குகிறார்கள், அல்லாஹ்வுடைய பேரிடி முழக்கம் ஒன்று அம்மக்களைப் பிடித்துக் கொள்கிறது. ஆகவே, பொழுது உதிக்கும் வேளையில், அவர்களை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. 15:73 இன்னும் நாம் அவர்கள் மீது (கல்) மாரியைப் பொழியச் செய்(து அவர்களை அழித்)தோம், ஆகவே, குற்றவாளிகளின் இறுதி முடிவு என்ன ஆயிற்று என்று (நபியே!) நீர் நோக்குவீராக. 7:84

பயங்கர இடிமுழக்கத்துடன் கூடிய கொடுங்காற்று சுடப்பட்ட கற்களை அவ்ஊர் மககள் மீது வீசி எறிந்து அனைத்து அநியாயக்கார வரம்பு மீறிய மக்களையும் அழித்து அவ்வூரை அல்லாஹ் தலைகீழாக புரட்டி விடுகிறான்.

அவர்கள் மீது சூடேற்றப்பட்ட கல் மழை பொழிந்து, அவ்வூரின் மேற்பகுதியைக் கீழ்ப்பகுதியாக்கினோம். 15:74

இவ்வாறு அல்லாஹ்வுடைய வேதனை அம்மக்கள் மீது இறங்கியது, அல்லாஹ் தன்னுடைய வேதனையை ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒவ்வொரு மாதிரியாக இறக்கி அழித்திருந்தாலும் இச்சமுதாயத்து மக்களை அழித்து அவர்கள் வசித்த ஊரையும் புரட்டியதன் நோக்கம் யாதெனில் , அல்லாஹ் மனிதனுக்கு உருவாக்கி கொடுத்த இயற்கை அமைப்பை சிர்குலைத்து தலைகீழாக மாற்றி தேவையுள்ளதை விட்டு தேவையில்லாததை எடுத்து இயற்கை சித்தாந்தத்தை புரட்டினார்கள். அதனால் அந்த மக்கள் வசித்த ஊரையே அல்லாஹ் தலைகீழாக புரட்டி விட்டதுடன் அதை பின் வரும் மக்களுக்காக அத்தாட்சியாக்கினான்.

உமது வாழ் நாளின் மீது சத்தியமாக! அவர்கள் தமது (காம) போதையில் தட்டழிந்தனர். அவர்கள் வெளிச்சத்தை அடைந்த போது, பெரும் சப்தம் அவர்களைத் தாக்கியது. அவர்கள் மீது சூடேற்றப்பட்ட கல் மழை பொழிந்து, அவ்வூரின் மேற்பகுதியைக் கீழ்ப்பகுதியாக்கினோம். சிந்திப்போருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. அவ்வூர் (நீங்கள் சென்று வரும்) நிலையான சாலையில் தான் உள்ளது. நம்பிக்கை கொண்டோருக்கு இதில் சான்று இருக்கிறது. 15:72,72,74,75,76,77

புரட்டப்பட்ட ஊர் அரேபியப் பிரதேசத்தில் ஜோர்தான் கடல் கரையில் அமந்துள்ளது அதன் மீது கடல் சூழ்ந்திருக்கிறது கடல் தண்ணீர் தேங்கி நிற்கும் குறிப்பிட்ட அவ்விடத்தில் யாரும் கால் வைத்தால் காலை உள்வாங்காது நீரின் மீதுப் படுத்தால் பலகை மிதப்பது போல் மிதப்பார்கள். காரணம் அதன் கீழ் புரட்டப்பட்ட அந்நகரம் இருப்பதாலேயாகும்.

இது சமீபத்தில் கேரளா குழுவினர் உலகம் முழுவதும் சுற்றுலா மேற்கொண்டு குர்ஆன் கூறும் அதிசய இடங்களை ஆய்வு செய்து அவ்விடங்களை வீடியோ கேமராவில் பதிவுசெய்து பல்லாயிரம் பிரதிகள் எடுத்து மக்களிடம் அனுப்பியுள்ளனர். இவர்கள் அந்நகரங்களுக்கு சென்று அங்கு வாழும் மக்களிடமும் அதன் சுற்று வட்டாரங்களிலும் ஒன்றுக்கு பலமுறை கேட்டறிந்து ஊர்ஜிதமானப் பிறகே வெளியிட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது )

படிப்பினைகள்:அதிகாலையில் அவர்களை நிலையான வேதனை திட்டமாக வந்தடைந்தது. ''ஆகவே, என்(னால் உண்டாகும்) வேதனையையும் எச்சரிக்கையையும் சுவைத்துப் பாருங்கள்''54:37 )) என அல்லாஹ் கூறுவதால் லூத் நபி காலத்தில் நடந்த அருவெருக்கத்தக்க செயலை அல்லாஹ் தொடர்ந்து லூத் (அலை) அவர்கள் மூலம் எச்சரித்துக் கொண்டேயிருந்தும் அவர்கள் அதை ஏற்று நடக்காததால் இறுதியில் கல்மாறியை பொழியச் செய்து அவ்வூரை தலைகீழாகப் புரட்டியது இறைவனின் கோபத்தின் தெளிவான வெளிப்பாடு தான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். மாறாக அவை இயற்கையின் சாதாரண சீற்றம் அல்ல ! என்பதை குர்ஆனின் கூற்றிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்வதுடன் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய விதத்தில் அஞ்சி நடப்பதுடன் , அவனுடைய சட்டங்களை நமது வாழ்க்கை நெறியாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்....

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்